Ticker

6/recent/ticker-posts

புதிய மின் கட்டண முறை


இலங்கையின் மின்சரத் தொழிற்றுறை ஒழுங்குறுத்துநரான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது, ஒற்றை மின்வழியினைப் பயன்படுத்தும் உள்நாட்டு மின் நுகர்வோருக்கு நேர அடிப்படையிலான வரித்தீர்வைக் கட்டண முறையினை அனுமதித்து உள்ளது

இதற்கு முன்னர் இந்த முறையானது மூன்று மின்வழி இணைப்புகளைக் கொண்ட மற்றும் 30A மற்றும் அதற்கு அதிகமாக மின் நுகர்கின்ற நுகர்வோர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்ததமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் இந்த வசதியினை தேர்ந்தெடுக்கும் அல்லது நிராகரிக்கும் வாய்ப்பு நுகர்வோரிடமே உள்ளது. மின் நுகர்வோரின் கோரிக்கையின் அடிப்படையிலேயே இவ் வசதி செயற்படுத்தப்படும்.


இந்த முறைமை அமுலாக்கத்தின் பிரதான நோக்கம் உச்ச நேரப் பகுதியின் போது பயன்படுத்தப்படும் மின்சார அளவினைக் குறைப்பது மட்டுமல்லாது உச்சமற்ற நேரப் பகுதியின் போது மின்சாரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தலாகும். உச்ச நேரப் பகுதியின் போது செய்யப்பட்டு வரும் பல மின் பயன்பாடுகள், உண்மையில் உச்சமற்ற நேரப் பகுதியில் செய்யக் கூடியவையே. சரியாகத் திட்டமிட்டு உச்சமற்ற நேரப் பகுதியில் மின் பயன்பாட்டினை நுகர்வோர்கள் மேற்கொள்வது நன்மை பயப்பதாகும்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமான திரு. தம்மித்த குமாரசிங்க இந்த உலகமானது சக்தியை சுத்தமாகவும் வினைத்திறனாகவும் பயன்படுத்துவதை நோக்கி நகர்கின்றது. நம்மில் பலர், சக்தி வினைத்திறன் மற்றும் சுற்றுச் சூழலுக்கு நட்பு என்ற காரணிகளால், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை வாங்குவதற்கு விரும்புகின்ற காலம் இப்போது வந்துள்ளது. இந்தப் புதிய வரித்தீர்வைக் கட்டண முறைமையானது மின்சார வாகனப் பயன்பாட்டாளர்கள் தங்கள் மின் வாகனங்களை குறைந்த செலவில் மின்னேற்றம் செய்து கொள்ள முடியும்என்று கூறினார். இது பற்றி மேலும் கருத்து தெரிவித்த அவர்இப்போது முதல், பல வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய நேர அடிப்படையிலான கட்டண முறையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.” என்று கூறினார்.
இலங்கையில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும்  அவற்றை மின்னேற்றுவதற்காக மின் வழங்கலின் உச்ச நேரப்பகுதி பயன்படுவதும் அவதானிக்கப்பட்டதன் வாயிலாகவே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டில் நாட்டின் மின்சார வாகன எண்ணிக்கையானது 90ல் இருந்து ஆரம்பித்து 4,000 எனும் அளவினை எட்டியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.


இந்தப் புதிய கட்டண முறைமையின் அடிப்படையில்  உச்சமற்ற நேரப் பகுதியில் (22.30- 05.30 மணிவரை) மின்சாரத்தைப் பயன்படுத்தினால், அலகொன்றிற்கு ரூ.13 மட்டுமே அறவிடப்படும்.

பகற்பொழுதில் (05.30-18.30 மணிவரை) பயன்படுத்தப்படும் ஒரு மின் அலகிற்கு ரூ.25ம், உச்ச நேரப் பகுதியில் (18.30-22.30 மணிவரை) பயன்படுத்தப்படும் ஒரு மின்சார அலகிற்கு ரூ.54ம் அறவிடப்படும்.

மின்சார வாகனப் பயன்பாட்டாளர்களின் உரிமைகள் காக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கமானது அண்மையில், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினை, மின் வாகன மின்னேற்றத் தொழிற்றுறையின் ஒழுங்குறுத்துநராக நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments