Ticker

6/recent/ticker-posts

2,175 விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் 2,175 விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்தது.
இதன்போது விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களிடம் 98,10,000 ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் M.S.M. பௌசர் தெரிவித்தார்.
நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்தமை, தரமற்ற பொலித்தீன் விற்பனை, கூடிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, பொதி செய்யப்பட்ட பொருட்களில் லேபிள்களை அகற்றி விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளது.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகார சபை நாடளாவிய ரீதியில் கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் விற்பனை நிலையங்களில் சோதனைகளை முன்னெடுத்தது.
இந்த சோதனை நடவடிக்கைகள் அடுத்த வருடம் ஜனவரி 15 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 12 வரை 2,747 விற்பனை நிலையங்களில் நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனைகளை முன்னெடுத்துள்ளது.

Post a Comment

0 Comments