இந்நாட்டின் 19வது திருத்தச் சட்டம் நீதிமன்ற சுயாதீனத்தை வலியுறுத்தி உள்ளது. அந்த நீதிமன்றின் சுயாதீன செயற்பாட்டுக்கு அசெளகரியத்தை இடையூறை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால், அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக கூறி வழக்குத் தொடர்வோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
அலரி மாளிகையில் (11) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
ஜனாதிபதி சிறிசேன சட்டமா அதிபரை அணுகி நீதிமன்றத் தீர்ப்பை அவசரமாக வெளியிட பிரதம நீதியரசருக்கு அழுத்தம் கொடுத்ததாக ஊடகங்களில் செய்தி வெளிவந்திருந்தது. இது நீதிமன்றத்திற்கு சிறிசேன கொடுத்த ஒரு அழுத்தம் என்றே பார்க்க வேண்டியுள்ளது. அவருக்கு வழக்கின் தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை கோருவதற்கு எவ்வித உரிமையுமில்லை.
அது மட்டுமல்லாமல், மஹிந்தவின் அணியைச் சேர்ந்த வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, கம்மன்பில போன்றவர்கள் ஊடக சந்திப்புகளை ஏற்பாடு செய்து நீதிமன்றத்திற்கு அச்சுறுத்தல் விடும் தொனியில் பேசி வருகின்றனர். நீதிமன்றத்தை அவமதிக்கும், அழுத்தங்களை பிரயோகிக்கும் இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறோம்.
நீதியான முறையில் செயற்பட்டுவந்த அரசாங்கத்தில் பிரச்சினையை உருவாக்கி சட்டவிரோத அரசாங்கமொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே உருவாக்கினார். ஆகவே அவரே இந்த பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கவேண்டும்.
அவ்வாறே பெரும்பன்மையின் விருப்புக்கு ஏற்ப செயற்பட்டால் மாத்திரமே இந்த பிரச்சினையை விரைவில் மாற்றியமைக்க முடியும். பெரும்பான்மைக்கும் ஜனாதிபதி இடமளிக்காவிட்டால் மக்களின் கடும் எதிர்ப்பினை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்தார்.

0 Comments