இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் உலகு தழுவிய அளவில் ஒரு
பெருங்குழப்பத்தையும், பேரச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலை
முகாந்திரமாகக் கொண்டு மொத்த இலங்கைக்கும் எதிரியாக இசுலாமியர்கள்
காட்டப்படலாம்.
கடந்த தசாப்தங்களில் நிகழ்த்தப்பட்ட “அரபி மயமாக்கம்” மற்றும் வகாபியிச
சோதனை முயற்சிகள் அதற்கான முகாந்திரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. இதனை
பாரதூரமாக உணர்ந்து உடன் செய்ய வேண்டியது என்ன? பெரும்பான்மை அப்பாவி
இசுலாமியர்கள் தாக்குதலுக்கு இலக்காகாமல் தடுக்க செய்யப்பட வேண்டியது என்ன ?
என்பது குறித்த உரையாடலைத் தொடங்குகிறது இப்பதிவு.
ஃபாத்திமா மஜிதா
நடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான்
நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால்
அரசினை மட்டுமே நாங்கள் பொறுப்புக்கூறுவது ஒரு வித தப்பித்தல் முறை. ஒரு
வித அச்சம் சார்ந்த முறை.
தாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லிம்கள் அல்ல, அவர்கள் பயங்கரவாதிகள்,
அவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்று சப்பைக் கட்டுவதை
நிறுத்துங்கள். கூட எங்களை நாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளாவிட்டால்
எங்கேயோ போய் முட்டி மோதி விடுவோம்.
கிட்டத்தட்ட இரு சகாப்தத்தின் முன்னால் போய் நின்று பார்க்கின்றேன்.
என்னையும் என்னைச் சுற்றி இருந்தவர்களும் படித்த பாடசாலை,
பல்கலைக்கழகங்கள், வேலை செய்த இடங்கள் எல்லாவற்றிலும் மனிதம் மட்டுமே
இருந்தன. படிப்படியாக அரேபியக் கலாச்சாரம் தலைக்கு ஏறத் தொடங்கியது.
முஸ்லிம் , காபிர் என்ற பிரிவினைவாதப் போக்கினை இந்த ஒற்றைக் கலாச்சாரம்
ஏற்படுத்தி விட்டது. அன்று
நாம் சாப்பிட்ட நாரிசாச் சோறு , பராத் ரொட்டி , போன்ற எல்லாவற்றினையும்
ஹராம் என்ற ஒற்றைக் கதவு போட்டு அடைத்து விட்டார்கள். ஒவ்வொருவரும் அடுத்த
சமூகத்திலிருந்து பிரித்து விடப்பட்டுள்ளோம். நான் ஐந்து வயதாக இருக்கின்ற
பொழுது எனது ஆடையை பற்றி கேள்வி எழுப்பாத மதரஸாக்கள் இன்று எனது எட்டு
வயது மகள் கருப்பு ஹபாயாவினை (பர்கா) அணிந்து வந்தால் தான் ஓத முடியும்
என்று சட்டம் வகுக்கின்றது.
பாவாடை சட்டை தாவணி அணிந்து பாடசாலை சென்ற ராத்தா பல்கலைக்கழகம்
செல்கின்ற அவளது மகளுக்கு கண்கள் இரண்டு மட்டும் தெரியும் விதமாக ஹபாயாவினை
போர்த்தி அனுப்பி வைக்கின்ற சூழல். தெருவுக்குத் தெரு பள்ளிவாசல், காபிர்,
ஷைத்தான் என்று கதறுகின்ற ஒலி பெருக்கிகள். போதாக்குறைக்கு நோன்பு ,
பெருநாள் காலங்களில் பேரீச்சம் பழமும் குர்பான் இறைச்சியும் கொடுத்து இந்த
அப்பாவிச் சனங்களை போட்டோ எடுக்கின்ற சகிப்புத் தன்மையற்ற வகாபிசத்தின்
கொடூரங்கள்.
எல்லாவற்றினையும் நாங்கள் பார்த்தும் பார்க்காமலும் இருந்த இந்த நோயின்
கடைசித் தருணம் தீவிரவாதமாக மாறி உயிர்களை பலியெடுக்கின்ற நிலைமை. இந்த
குறிப்பிட்ட தீவிரவாத அமைப்பின் நடவடிக்கைகளினால் ஒட்டுமொத்த முஸ்லிம்
சமூகமும் இக்கட்டான நிலையில் நிற்கின்றது.
இனிமேலாவது சவுதியின் கைக்கூலிகளான இத்தீவிரவாதப் போக்கினை
கண்டுகொள்ளாமல் விடுவது முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது. ஆனால்
இந்த நிலைமையை விளங்கிக் கொள்ளாது நம்மை நாமே தப்பித்துக் கொள்ளவதை
விட்டு இந்தத் தீவிரவாத நோயிலிருந்து எமது தலைமுறையை காப்பாற்ற
முனையுங்கள்.
எங்களைச் சுற்றி என்ன நடந்தது எப்படியெல்லாம் நாங்கள் மூலைச் சலவை செய்யப்பட்டோம் என்பதை உணருங்கள். படிக்க: ♦ இலங்கை குண்டுவெடிப்பு
♦ இலங்கை குண்டு வெடிப்பு : எங்கட நாட்டுப் பக்கம் வந்திடாதே | பாஜக-வைச் சாடும் இலங்கை மக்கள் ! கலையரசன்
இலங்கையில் நடந்த பயங்கரவாத குண்டுவெடிப்பு சம்பவங்கள்
தொடர்பாக எல்லோரும் ஒரு முக்கியக் குற்றவாளியை பற்றிப் பேசத்
தயங்குகிறார்கள். அதுதான் சவூதி அரேபியா.
இலங்கையில் இஸ்லாமிய மத அடிப்படைவாதம் வளர்வதற்கு முக்கியக்
காரணம் சவூதி அரேபியா. பாரம்பரியமாக மிதவாதத் தன்மை கொண்ட ஸூபி
முஸ்லிம்களை, கடும்போக்கு வஹாபியர்களாக மாற்றியது சவூதிப்
பணம்தான்.
கிழக்கிலங்கையில் மாத்திரம் பல நூற்றுக் கணக்கான
பள்ளிவாசல்கள், குரான் பாடசாலைகள் சவூதி நிதியில்
கட்டப்பட்டுள்ளன. அங்கெல்லாம் சவூதி பாணியிலான வஹாபிச இஸ்லாம்
போதிக்கப்பட்ட நேரம் யாராலும் தடுக்க முடியவில்லை.
இலங்கைக்கு சவூதி கலாச்சாரம் இறக்குமதி செய்யப்பட்ட நேரம்
மிதவாத முஸ்லிம்கள் அதை எதிர்க்காத காரணம் என்ன? ஒரு காலத்தில்
அபாயா அணிவதை விசித்திரமாகக் கருதிய, சேலை அணியும் இலங்கை முஸ்லிம்
பெண்கள், எந்த தயக்கமும் இல்லாமல் அபாயாவை ஏற்றுக் கொள்ளும் நிலைமை
எப்படி உருவானது? இந்தக்
கேள்விகளுக்கான ஒரே விடை சவூதி அள்ளிக் கொடுத்த ரியால்கள் பலரது
வாய்களை அடைக்க வைத்துள்ளன. சவூதியின் தலையீட்டை சமூக
அபிவிருத்திக்கான பங்களிப்பாக கருதிய காலம் ஒன்றிருந்தது.
குறிப்பிட்ட சில முஸ்லிம் அமைச்சர்கள் சவூதி நிதியில் தான் தமது
தொகுதிகளை அபிவிருத்தி செய்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்த
விடயம்.
சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது போல சவூதி நிதியுதவியும்
தானமாக கிடைக்கவில்லை. அதற்குப் பின்னால் ஒரு மத அடிப்படைவாத
வல்லரசின் மேலாதிக்கக் கனவு இருந்தது. அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் ஆசீர்வாதம் இருந்தது.
இதைப் பற்றி எல்லாம் பேசாமல் நகர்ந்து செல்லும் போக்கானது, எந்தக்
காலத்திலும் பிரச்சினையை தீர்க்க உதவப் போவதில்லை. மிதவாத
முஸ்லிம்களுக்கும், இடதுசாரிகளுக்கும் சேர்த்து வகுப்பெடுக்கும் சில
முஸ்லிம் முற்போக்காளர்கள் கூட இந்த விடயத்தை பற்றிப் பேசாமல்
கடந்து செல்கின்றனர். ஃபாத்திமா மஜிதா
இலங்கையில் உள்ள இஸ்லாமிய இயக்கங்களையும் அடிப்படைவாத அமைப்புக்களாக
பொதுமைப்படுத்திப் பார்த்தல் இன்னும் பிரச்சனைகளை அதிகரிக்கச் செய்யும்
என்றொரு கருத்தை ஆண்கள் முன் வைக்கின்றனர்.
இங்கே நான் ஆண்கள் என்று குறிப்பிட்டுச் சொல்வது அவசியமானது.
இவ்வமைப்புக்கள் அனைத்தின் மீதான எனது எதிர்மறையான விமர்சனப் பார்வை,
தற்பொழுது நடைபெற்று முடிந்த பேரிழப்பிற்குப் பின்னர் மேலும்
அதிகரித்துள்ளது.
தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கும் தங்களது அமைப்பிற்கும்
சம்பந்தமில்லை என்பதை நிரூபிப்பதிலேயே அனைவரும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தனியே ஆண் மையச் சிந்தனையை மட்டும் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட இந்த
அமைப்புக்களின் கடந்த காலச் செயற்பாடுகளை நோக்கினால் மத்திய கிழக்கு
நாடுகளிலிருந்து வருவிக்கப்பட்ட நிதிகளின் மூலம் கட்டிடங்கள் அமைப்பதும்
இங்கே இருக்கின்ற இளைஞர்களை தங்களது சிந்தனைப் பள்ளியில் சேர்த்துக்
கொள்வதிலுமே குறியாக இருந்தனர்.
பின்னர் இவ்வியக்கங்களிடையே யார் தூய்மையானவர் என்பதை நிரூபிப்பதற்கான
போட்டி பின்னர் சில இடங்களில் வன்முறையை தோற்றுவித்தன. பிற சமூகங்களுடன்
நல்லிணக்கம் பேணல், தமது சமூகத்திற்குள் இருக்கின்ற பொதுப் பிரச்சனைகள்,
ஆண் பெண் சமத்துவம், பெண்களின் நலன்கள் அவர்களுக்கெதிரான வன்முறைகள்,
எவற்றிலுமே இந்த இஸ்லாமிய அமைப்புக்களின் செயற்பாடுகள் பூச்சியமாக இருந்து
வந்துள்ளன.
மாறாக, பெண்களின் நடத்தைகளையும், அவர்களது ஆடைகளை வரையறை செய்வதிலும்
மட்டுமே கரிசனை செலுத்தினர். எநதவொரு சமூகத்தின் வளர்ச்சியிலும்
திட்டமிடலிலும் பெண்களின் பங்களிப்பு மிகவும் அத்தியாவசியமானது.
அவ்வாறானதொரு பங்களிப்பற்ற எந்தவொரு சமூகச் செயற்பாடும் பின்னடைவுகளை
எதிர்நோக்கும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டவள். இதனை இன்றைய அனைத்து
சம்பவங்களும் நிரூபித்து வருகின்றன.
வேதனை, ஆற்றாமை, குற்றவுணர்ச்சி, எதிர்காலம் பற்றிய கேள்வி எல்லாம்
நிரம்பியவர்களாக ஆண்கள் மட்டுல்ல எமது முஸ்லிம் பெண்களும் உழன்று
கொண்டிருக்கின்றார்கள். விட்டுக் கொடுப்பு, சகிப்புத் தன்மை கொண்ட
சந்ததியை கட்டியெழுப்பத் தயாராக இருக்கின்றார்கள். பிற சமூகங்களுடனான சக
வாழ்வினை விரும்புகின்றார்கள். சகவாழ்வுக்கான ஓர் அழைப்பிற்கு முஸ்லிம்
பெண்களின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் மிக்க அவசியமாகும் .
இந்த வறட்டுத் தன்மை கொண்ட இஸ்லாமிய இயக்கங்கள் அற்ற ஆண், பெண்
சமத்துவம் நிறைந்த ஒரு கூட்டு நல்லிணக்கம்தான் இன்றைய சூழலுக்கு உகந்தது.
அதனை நோக்கியே நாம் அனைவரும் செயற்பட வேண்டும். உங்களுடைய சகிப்புத்
தன்மையற்ற தீவிரவாத நோய்க்காக எங்களது குழந்தைகளை மீண்டும் பலியிட நாங்கள்
விரும்பவில்லை. அப்துல் வஹாப்
வெட்கி தலைகுனிஞ்சி அவமானத்துல கூனிக் குறுகி நிற்கும் போது
பாதிக்கபட்டவங்களுக்கு ஆறுதல் சொல்லக் கூட முடியாத சமூகம்தான் இது.
நியூசிலாந்து பள்ளிவாசல்ல லைவ்ல சுட்டு கொல்லும் போது அமைதியா இருந்தேன்
அப்ப கருத்து சொன்னா என்ன உங்க ஆளுங்க சாகும் போது ரத்தமா, உலகம் முழுக்க
உங்க ஆளுங்க குண்டு வச்சி கொல்லுறாங்க அதென்ன சட்னியா கேப்பான்னு அமைதியா
இருந்தேன்.
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களுக்காக எதோ எழுதலாம்னா
இவரே வைப்பாராம் இவரே அழுவாறாம் அப்படின்னு சொல்வாங்கன்னு கடந்து போனேன்
ஏன்னா பள்ளிவாசல் துப்பாக்கி சூடுல கன் மேனா தெரிந்தவன் இலங்கை பிரச்சனைல
தீவிரவாதிகளா தெரிய மாட்டான். அழுத்தமாக சொல்லனும்னா இஸ்லாமிய
தீவிரவாதியாகத் தெரிவான்.
ஒரே விசயம் இதுல சொல்லனும்னா நீங்க பார்க்கிற பெரும்பாலான
இஸ்லாமியர்களுக்கு தீவிரவாதிகள் அது சம்பந்தமான பேச்சுகள் மூளைச்சலவை
செய்யக்கூடிய அமைப்புகளை பார்த்தே இருக்க மாட்டாங்க. இங்க பள்ளிகளில்,
இஸ்லாமிய அமைப்புகளில், மதரஸாக்களில் என்ன சொல்லி கொடுக்காங்க.. என்ன
பண்றாங்கன்னு வெளிய இருந்து பார்க்கும் மத்த மதங்களை விட எங்களுக்கு
நன்றாகவே தெரியும்.
இது தமிழக இஸ்லாமியர்கள் நிலை மட்டும் அல்ல, மற்ற மாநில இஸ்லாமியர்கள்
உலகில் வாழக் கூடிய மற்ற நாடுகளில் உள்ள இஸ்லாமியர்களுடன் நான் பழகிய வரை
நானும் தீவிரவாத ஆதரவாளர்களைக் காணவில்லை. சில மத விசயங்களில் ஊறிப் போய்
இருப்பார்கள். மாற்றுக் கருத்து, இல்லை மாற்று மதத்தாரிடம் இருந்து தூர
விலகி இருப்பார்கள். அவர்கள் வளர்ந்த சூழல் புரிதல் அப்படி… ரொம்ப
நல்லவங்க, புனிதமானவர்கள்னு சொல்லல.. அதே நேரம் பதிவு போட்டுதா மன
நிலையயும் மனிதாபிமானத்தையும் காட்டணும்னு அவசியம் இல்ல…
சில நேரம் வேற கருத்து மோதல் பேசினாக் கூட, “என்ன பாய் குண்டு வச்சத மட
மாத்தி விடதான் இதெல்லா பண்றீங்களான்”னு கேக்குற ஜனங்கள் வாழுற சமூக
வலைத்தளம் இது. அப்பவும் கூனிக் குறுகி வலிகளோடதான் கடந்து போறோம். உச்சு
கொட்டவும் கூட மதமும் சாதியும் பார்த்து பேச வேண்டி இருக்கு.
மேல சொன்னத திரும்பவும் சொல்லிக்கிறேன் அவமானத்துல கூனிக் குறுகி நிற்கும் போது ஆறுதல் வராது. ரஸ்மி கலீல்
இஸ்லாமிய சமூகம் தன்னை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணமிது.
இதை வேற்று மத அடையாளத்துடன் இடதுசாரிகள் செய்யும் போது உள்முரண்பாடுகள் பல
உண்டாகும். ஆனால் களத்தில் இதைப்பற்றி பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்.
குறிப்பாக இஸ்லாமிய பாடசாலைகளுக்குள் மத அடிப்படைவாதத்தின் தாக்கம் பற்றி
உரையாடல் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.
திறந்த மனதுடன் இஸ்லாமிய சமூகம் தன் மீதான சுய விமர்சனங்களை மேற்கொள்ள வேண்டும்.
….. குற்றம் எதுவும் செய்யாமலேயே குற்ற உணர்வோடும், குற்றவாளிகள்
போன்றும் அந்நிய சமூகங்களுக்கு மத்தியில் எம்மை தலைகுனிந்து வாழ வைத்து
விட்டார்கள் இந்த போலி ஜிஹாதிஸ்ட்டுகள். கிந்தோட்டைப் பிரச்சினையின்
போதும், உணவுப் பொருட்களில் கருத்தடை மாத்திரை கலத்தல் தொடர்பான
பிரச்சினையின் போதும் தமிழிலும், சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எமது
சமூகத்தின் “கற்பின் தூய்மை” யைப் பறைசாட்டி பந்திக் கணக்கில் எழுதி,
சிங்களவர்களுக்கும் பகிர்ந்து விட்டு இன்று வெட்கத்தோடு அலுவலகத்தில்
சிங்கள சக ஊழியர்களை சந்திக்கின்றேன். ஐந்து
வருடங்களுக்கு மேலாக நாம் சமூக வலைதளங்களில் இதைத்தான் வலியுறுத்தி
வலியுறுத்தி எழுதி வந்தோம். ஆனால் பெரும்பாலானவர்கள் எம்மைக் கோழைகள் என்று
எள்ளி நகையாடினார்கள். இன்று அந்த தைரியசாலிகள் முகநூலில் மன்னிப்புக்
கேட்டு கெஞ்சி எழுதும் பதிவுகளைக் காணும் போது இந்த ஆழ்ந்த துக்கத்திலும்
சிரிப்புத்தான் வருகின்றது.
சிங்கள வெகுமக்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ், தலிபான் போன்ற அமைப்புக்களின்
உருவாக்கத்தின் பின்னணி, அதன் நோக்கம், இது போன்ற பயங்கரவாத இயக்கத்தின்
உருவாக்கத்தில் உள்ள பிராந்திய அரசியல் நலன்கள், சியோனிஸ சதித்திட்டங்கள்
பற்றி எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் அவர்களுக்கு
இல்லை.
ஏனெனில் அவர்கள் எம்மைப் போன்ற சர்வதேச இனமல்ல. இலங்கையில் மாத்திரமே
அவர்கள் வாழ்கின்றார்கள். உண்டு, களித்து சந்தோசமாக வாழ
விரும்புகின்றார்கள். இப்படியிருக்க, எமது அரபு நாட்டுப் பாணியிலான
கலாச்சார மாற்றங்கள், எமது இயக்கச் சண்டைகள் போன்றவற்றை மத்திய கிழக்கில்
அரங்கேறும் அவலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து அவர்கள் பீதியடைவதில் நியாயம்
இல்லாமல் இல்லை.
இஸ்லாத்தின் உன்னதக் கொள்கைகளை, இஸ்லாம் கடமையாக்கிய இபாதாக்கள் மூலம்
அது எதிர்பார்க்கும் உன்னத சமூக மாற்றத்தை நாம் அந்நிய சமூகங்களுக்கு
மத்தியில் எடுத்துச் செல்லவில்லை. மாற்றமாக அடையாள இஸ்லாத்திற்கே (Symbolic
Islam) அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுத்து அந்நிய சமூகங்கள்
மத்தியில் பீதிகளைக் கிளப்பினோம்.
எமக்கென்று ஒரு அழகான சோனக முஸ்லிம் கலாச்சாரம் இலங்கையில் இருந்தது.
திடீர் திடீர் என்று புதிய புதிய மாற்றங்கள். பருவமடையாத பெண்களை எல்லாம்
முகம் மூட வைத்தது, உலமாக்கள் மாத்திரம் அணிய வேண்டிய ஜூப்பா என்ற ஆடையினை
கண்ட கண்ட காவாலிகள் எல்லாம் அணியத் தொடங்கியது, தெருவுக்குத் தெரு
பள்ளிவாயல்கள், எல்லாப் பள்ளிகளிலும் போட்டிக்குப் போட்டி ஒலிபெருக்கிகள்,
இருக்கின்ற எல்லா ஆங்கிலப் பெயர்களிலும் இஸ்லாமிய ? இயக்கங்கள், புதுப்புது
பத்வாக்கள், சுவர்க்கத்துக்கான அழைப்புக்கள், வழிகேட்டுப் பட்டங்கள். படிக்க: ♦ யார் பயங்கரவாதி ? சவுதி அரேபியாவை விமர்சிக்கும் அரபுலகம்
♦ ஐ.எஸ் – சவுதி கூட்டணி அமெரிக்காவுக்குத் தெரியும் !
கூடப் பிறந்த சகோதரனுக்கே ஆயிரம் ரூபா கொடுக்காத பச்ச உலோபிகளெல்லாம்
ஹஜ்ஜூப் பெருநாள் அன்று பேருக்கும், புகழுக்கும் பெரிய மாடுகளை உள்ஹிய்யா
கொடுத்தல், வருடாந்தம் பல உம்றாக்கள். புற்றீசல் போல் மத்ரஸாக்கள்,
இஸ்லாமிய இன்டர்நேசனல் ஸ்கூல்கள். முஸ்லிம் பாடசாலைகளின் ஒழுக்கம், தரம்,
பரீட்சைப் பெறுபேரு எந்தவித அக்கறையும் இல்லாவிட்டாலும் மாணவிகள் முகம் மூட
வேண்டும், மாணவர்கள் தாடிவைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று சாரத்தினைத்
தூக்கிக் கொண்டு மல்லுக்கு நிற்றல், கண்ட கண்ட பொருட்களுக்கெல்லாம் ஹலால்
ஸர்டிபிகட்.
நாம் எப்படியான ஒரு நாட்டில், சூழலில் வாழ்கின்றோம் என்று விளங்கவில்லை.
விளங்கிய உலமாக்கள் “பிக்ஹூல் அவ்லவியாத்” என்ற முன்னுரிமைப்படுத்த
வேண்டிய விடயங்களைக் கற்பித்தார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்த பட்டம்
“கோழைகள், பயந்தாங்கொல்லிகள், நவீன உலமாக்கள்”.
இதனாலேயே நாம் முகநூலில் எம்மால் முடிந்தளவில் எழுதினோம். நாம் ஒன்றும்
ஆலிம்கள் இல்லை. மெத்தப் படித்த மேதாவிகளும் இல்லை. என்றாலும் பெரும்பான்மை
சமூகத்தின் உளவியலை அப்போதே கற்று வரவிருக்கும் ஆபத்துக்கள் பற்றி
முடிந்தளவில் எழுதினோம்.
சமூக வலைதளங்கள் ஆட்சி மாற்றத்தினையே ஏற்படுத்தும் வல்லமை படைத்தவை.
ஆனால் எமது சமூகம் அதனை எதற்காகப் பயன்படுத்தியது?. ஆளுக்கால் சேற்றை
வாரியிறைத்தோம். இயக்கங்களாகப் பிரிந்து சண்டை பிடித்தோம். சின்னச் சின்ன
விடயங்களுக்கெல்லாம் முர்த்த்த், முஷ்ரிக், காபிர் என்று முடிவுகளை
வாரியிறைத்தோம்.
ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாதிகள் என்று தெரிந்தும் அவர்களோடு எம்மவர்கள்
கொஞ்சிக் குலாவினார்கள். எச்சரித்தும் கேட்கவில்லை. அந்த ஐ.எஸ். ஐ.எஸ்
தரப்பில் உலமாக்கள் என்ற போர்வையில் இருந்து கொண்டு பெரிய வீராவசனம் பேசிய
“ஆதார நாயகர்”களின் பதிவுகளுக்குச் சென்று ஏதோ அவர்கள் அல்லாமா குல்லிகள்
போட்டு ஹார்டிங் போட்டார்கள். தாம் விரும்பாத இயக்கத்தினரின் தனிப்பட்ட
பலவீனங்கள், குறைகளை எல்லாம் பகிரங்கப்படுத்தினார்கள். அல்ஹம்து
சூறாவுக்குப் பொருள் தெரியாத விடலைப் பசங்கள் எல்லாம் பத்வா கொடுத்த்த்
துணிந்தார்கள்.
சகவாழ்வைக் கேவலப்படுத்தி எழுதினார்கள். குட்மோனிங் சொல்வது ஹராம்,
அந்நியருக்கு புத்தாண்டு வாழ்த்துக் கூறுவது ஹராம், அவர்கள் தரும்
பலகாரங்களைச் சாப்பிடுவது ஹராம். இப்படி அந்நிய சமூகங்கள் மீதான வெறுப்பினை
இன்னும் இன்னும் அதிகப்படுத்தினார்கள். நிர்ப்பந்தமான ஒரு சூழலில் மங்கள
விளக்கில் தீப்பந்தம் ஏற்ற நிர்ப்பந்திக்கப்பட்ட உலமாக்களை நாட்கணக்கில்
முகநூலில் கழுவி ஊற்றினார்கள். எல்லாவற்றுக்கும் “மீம்ஸ்” என்றும் பகிடி
என்றும், சிரிப்பும், கூத்துமாக இருந்தார்கள். சமூகத்தின் சீரியஸான
பகுதியினை நாம் எழுதினால் எம்மை நாட்கணக்கில் சீண்டுவார்கள். இப்படிக்
கூத்தும் கும்மாளமுமாக காலம் கழித்தவர்கள் இன்று முகநூலில்
அழுதுபுலம்புகின்றார்கள். இனி வெள்ளம் தலைக்கு மேலால் சென்று விட்டது.
இனியாவது இருக்கின்ற கௌரவத்தினைப் பாதுகாத்து மியன்மார் அளவுக்கு நாம்
சென்று விடாமல் புத்தி சாதூர்யமான முடிவுகளை எடுத்து ஆக்கபூர்வமான
செயற்றிட்டங்களை முன்னெடுப்போம். தீவிரவாதம் இல்லாத நல்ல தலைவர்களை தெரிவு
செய்வோம். அடையாள இஸ்லாத்திற்கு அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுக்காமல்
விழுமிய இஸ்லாத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம்.
முஸ்லிம் பாடசாலைகளைக் கட்டியெழுப்பி கல்வித் துறையில் முன்னேறுவோம்.
உம்றாக்கள், ஆடம்பர வீடுகள், ஆடம்பரத் திருமணங்கள் என்று பணத்தினை
விரயமாக்காமல் சமூகத்தினை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவோம்.
அகதிகளாக புலம் பெயரும் ரோஹிங்கியா முசுலீம்கள்.
இல்லாவிட்டால் மியன்மார் முஸ்லிம்கள் போன்று கப்பல்களில் நாடுகளைத்
தேடித் தேடி தஞ்சம் அடைய நேரிடும். இதனை நான் சும்மா சொல்லவில்லை.
நாளாந்தம் சிங்கள முகநூல் பக்கங்கள், வெப்சைட்டுக்களில் உள்ள ஆக்கங்கள்,
அதற்கு வரும் சிங்கள இளைஞர்களின் பின்னூட்டங்களை அடிப்படையாக வைத்து
சொல்கின்றேன். அடித்துச் சொல்வேன், சிங்கள இளம் சமுதாயத்தில் நூற்றிற்கு
தொன்னூறு வீதம் எம்மை மிகவுமே வெறுக்கின்றார்கள்.
எமது ஜிஹாதிக் குஞ்சுகளுக்கு நாம் தெரிவித்துக் கொள்வது, உங்கள்
தியாகத்தினால் நாம் இப்போது மிகவும் கௌரவத்துடன் தலைநிமிர்ந்து ?
வாழ்கின்றோம். அதற்குக் கூலியாக நீங்கள் சுவர்கங்களில் கன்னிகளோடு நன்கு
சல்லாபியுங்கள். இங்கு எமது பெண்களுக்கு பாதையில் போக முடியவில்லை. பர்தா
கொச்சைப்படுத்தப்படுகின்றது. வாழக்கையிலேயே கேட்காத தூசனங்களால் துவட்டி
எடுக்கப்படுகின்றோம். எம்பெருமானார் இனி இல்லை என்ற அளவுக்கு
வசைபாடப்படுகின்றார். ஒவ்வொரு முஸ்லிமையும் சந்தேகத்துடன்
பார்க்கின்றார்கள். நீங்கள் சுவர்க்கத்தில் நன்கு அனுபவியுங்கள்.
அதே போன்று, காத்தான்குடி போன்ற தனி முஸ்லிம் ஊர் சகோதரர்களுக்கு நாம்
மிக அன்போடு வேண்டிக் கொள்வது, உங்களையும், உங்கள் ஊர்களையும் நாம்
நேசிக்கின்றோம். நீங்கள் மிகவும் நல்லவர்கள். மனிதாபிமானம் மிக்கவர்கள்.
ஆனால் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள்.
நாம் வாழும் ஊர்கள் உங்களைப் போன்று முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக்
கொண்ட ஊர்கள் இல்லை. சுற்றி வர சிங்கள ஊர்கள். எமக்கென்று பாராளுமன்ற
உறுப்பினர் எப்படிப் போனாலும், மாகாண சபை ஏன் பிரதேச சபை உறுப்பினர்களே
இல்லை. எல்லாம் சிங்களவர்கள். கிராம சேவகர் முதல் பிரதேச செயலாளர்
காரியலாம், மாவட்ட செயலகம், கல்விக் காரியாலயங்கள், வைத்தியசாலைகள், அரச
அலுவலகங்கள், வைத்தியசாலை டாக்டர்கள் முதல் நேர்ஸ் மார் எல்லாமே
சிங்களவர்கள்.
ஆக, உங்கள் ஊர்களில் இருந்து சில செத்த மூளைகளால் உருவாக்கப்படும்
இயக்கங்களின் குப்பைகளை எல்லா முஸ்லிம் ஊர்களுக்கும் நகர்த்துபவர்கள்
தொடர்பில் அவதானமாக இருந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். இன்றோ,
நாளை என்றோ எனது மனைவி பிள்ளை பெற்றெடுக்க தயாராக இருக்கின்றார். அரச
வைத்தியசாலைக்குப் போகவே முடியாது. அங்கு எம்மை குத்திக் காட்டிக் கொண்டே
இருப்பார்கள். தனியார் வைத்தியசாலைக்குப் போவோம் என்கின்றார். ஒரு சாதாரண
அரச ஊழியர் எப்படி தனியார் வைத்தியசாலைக்கு இலட்சங்களைக் கட்டுவது? ஓரளவு
படித்த எங்களுக்கே வைத்தியசாலைகளில் இந்தக் கதியென்றால் பெரும்பான்மையாக
இருக்கும் பாமர முஸ்லிம் தாய்மார்களின் நிலை என்ன ? சற்று சிந்தித்து
செயற்படுங்கள்.
கடைசியாக, இந்தக் கொடூரத் தாக்குதலை எம்மவர்கள் செய்திருக்கலாம். அல்லது
வேறு பயங்கரவாத இயக்கங்கள், அல்லது அரசியல் குருகிய நோக்கம் கொண்டவர்கள்
செய்திருக்கலாம். அல்லது பிராந்திய அரசியல் நலன்கள் பின்னணியாக இருக்கலாம்.
எப்படியிருந்தாலும், நாம் எமது சமூகத்தினை இனி வலுப்படுத்த வேண்டும்.
அதிக குருதி கொடை கொடுத்த சமூகம், அனர்த்தங்களின் போது எந்தவொரு இனமும்
செய்யாத அளவு களப்பணி செய்ய சமூகம் இன்று கூனிக் குருகி நிற்கின்றது. நாம்
எமது பிழையான செயற்பாடுகளால் படைத்த இறைவனுக்கும், எம்பெருமானாருக்கும்
களங்கத்தினை, கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இதுவே
சுதாகரித்து மீண்டும் எழும்புவதற்கான கடைசி சந்தர்ப்பம் என்பதனை புரிந்து
கொள்வோம்….
தொகுப்பு :
0 Comments