Ticker

6/recent/ticker-posts

7 மாதங்கள் தடுப்புக் காவலில் இருந்த காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா போட்ட ‘வைரல் ட்வீட்’!

7 மாதங்கள் இந்திய அரசால்  தடுப்புக் காவலில் வைக்கபட்டிருந்த காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

கடந்த ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவான 370-ஐ மோடி அரசு ரத்து செய்தது. ரத்து செய்வதற்கான ஆணையை வெளியிடுவதற்கு முன்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் உட்படப் பல முக்கிய அரசியல் தலைவர்களைத் தடுப்புக் காவலில் வைத்தது மோடி  அரசு. 

இந்நிலையில் விடுதலையான சில மணி நேரங்களில் ஒமர் அப்துல்லா நகைச்சுவை உணர்வுடன் பதிவிட்ட ஒரு ட்வீட், வைரலாகி வருவதாக என்டிரிவி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலையில், ஒமர் அப்துல்லா, தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், “வேடிக்கையான ஒரு விஷயம்… தனிமையில் அல்லது ஊரடங்கு உத்தரவில் எப்படி வாழ்வது என்ற டிப்ஸ் வேண்டுமென்றால், என்னிடம் அதற்கான பல மாத அனுபவம் உள்ளது. ப்ளாக்கில் அது குறித்து எழுதலாம்,” என்று குறும்புத்தனமாக பதிவிட்டுள்ளார். அவரின் இந்த ட்வீட்டுக்கு 15 நிமிடங்களில் 5,000 லைக்கள் மற்றும்1,000 கமென்ட்ஸ்கள் பதிலாக வந்துள்ளதாக குறித்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியளவில், தற்போது சுமார் 500 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் உள்ள 32 மாநிலங்கள் முழு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளன. மாநில மற்றும் மத்திய அரசுகளும் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இன்று விடுதலையானதைத் தொடர்ந்து ஒமர் அப்துல்லா இவ்வாறு கருத்து வெளியிட்டள்ளார். 
“232 நாட்களுக்குப் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளேன். 2019, ஆகஸ்ட் 5-ல் இருந்த உலகமும் தற்போது உள்ள உலகமும் முற்றிலும் வேறாக உள்ளது,” என்று ட்வீட் செய்துள்ளார்.
மேலும் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தன்னுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வரான மெஹ்பூபா முப்தியும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் கொரோனா குறித்துப் பேசுகையில், “இன்று நாம் வாழ்க்கைக்கும் இறப்புக்கும் இடையிலான போரில் ஈடுபட்டுள்ளோம் என்பதை உணர்கிறேன். யாரெல்லாம் என்னுடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டார்களோ அவர்கள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். கொரோனா வைரஸை எதிர்கொள்ள நாம் அனைவரும் அரசின் உத்தரவுகளைப் பின்பற்றி நடக்க வேண்டும்,” எனக் கூறினார். 
கடந்த, 13 ஆம் தேதி ஒமர் அப்துல்லாவின் தந்தையும் ஜம்மூ காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். 
கடந்த மார்ச் 10 ஆம் திகதி, ஒமர் அப்துல்லாவுக்கு 50 வயது ஆனது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் கைது செய்யப்பட்டபோது, எந்த சட்டப் பிரிவுக்குக் கீழ் கைது செய்யப்படுகிறார் என்று சொல்லப்படவில்லை. ஆனால் பின்னர், பிஎஸ்ஏ எனப்படும் பொது பாதுகாப்புச் சட்டத்திற்குக் கீழ் சிறை வைக்கப்பட்டார். 
தனது சிறைவாசத்தின் போது, தாடியை மழிக்க மறுத்துவிட்டார் ஒமர் அப்துல்லா. தடுப்புக் காவலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில், அவர் தாடியை மழிக்காமல் இருந்தார். 

Post a Comment

0 Comments