மனைவிக்கு தெரியாமல், அவர் பயணித்த விமானத்திலேயே கணவரின் உடல் கொண்டுவரப்பட்ட சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள புத்தியபுரத்தைச் சேர்ந்தவர் முகமது சாகீர்(30). இவர் கடந்த 6வருடங்களாக ஓமான் நாட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், சாகீருக்கு 6 மாதங்களுக்கு முன் ஷிபானா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பின் ஷிபானாவும், சாகீருடன் ஓமானுக்கு சென்றுள்ளார்.
தொடர்ந்து, சாகீர் நேற்று வீட்டின் அருகில் உள்ள மைதானத்தில் நண்பர்களுடன் கால்பந்து விளையாடச் சென்றிருக்கிறார். விளையாடச் சென்ற சிறிது நேரத்திலேயே நெஞ்சுவலி ஏற்பட்டு சாகீர் மைதானத்தில் சுருண்டு விழுந்துள்ளார். உடனே நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அதற்குள் சாகீரின் உயிர் பிரிந்துவிட்டது. ஆனால், இந்த விவரத்தை ஷிபானாவிடமிருந்து மறைத்துள்ளனர் சாகீரின் நண்பர்கள். காரணம் ஷிபானா மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கிறார். மாறாக சாகீருக்கும் கொரோனா தொற்று இருக்கிறது அவரை மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறோம் என்று நண்பர்கள் சாகீரின் மனைவியிடம் கூறியுள்ளனர்.
சாகீர் இல்லாமல் வீட்டில் தனியாக இருக்க வேண்டாம் என்று கூறி ஷிபானாவை கேரளா கண்ணூருக்கு திருப்பி அனுப்புவதற்குப் பேசியுள்ளனர். ஆனால், சாகீரை பார்க்க வேண்டும் என்று ஷிபானா கூறியுள்ளார். அதற்கு, கொரோனா தொற்று என்பதால் பார்க்க இயலாது. நீங்கள் ஊருக்கு கிளம்புவது நல்லது என்று சம்மாளித்துள்ளனர்.
ஷிபானா அதை ஏற்றுக்கொண்டு ஊருக்கு கிளம்ப, நண்பர்கள் டிக்கெட் வாங்கிக் கொடுத்து அவரை விமானம் ஏற்றியுள்ளனர். ஆனால், அவர் பயணித்த விமானத்திலேயே சாகிரின் உடலும், ஷிபானாவுக்கு தெரியாமல் கொண்டுவரப்பட்டுள்ளது. உறவினர்களும் இந்த தகவலை ஷிபானாக்கு தெரிவிக்கவில்லை. ஷிபானா நாடு திரும்பியதும் சாகீரின் மரணம் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments