(க.கிஷாந்தன்)
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஈரோஸ் அமைப்பு மலையகத்திலுள்ள மாவட்டங்களில் போட்டியிடாது என்று அவ்வமைப்பின் மலையக பிராந்திய இணைப்பாளர் ஜீவன் ராஜேந்திரன் தெரிவித்தார்.
நுவரெலியா 13.03.2020 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது.
" ஈரோஸ் அமைப்பு கடந்த 40 வருடங்களாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் நலன்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. விரைவில் தேர்தலொன்று நடைபெறவுள்ள நிலையில் மக்கள் பக்கம் நின்று முடிவெடுக்க வேண்டிய தேவைப்பாடு எமக்கு இருக்கின்றது.
இதன்படி பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் களநிலவரத்தை ஆராய்ந்து, முடிவெடுக்கும் அதிகாரத்தை ஈரோஸ் அமைப்பின் மத்திய குழு மலையக பிராந்தியக் குழுவுக்கு வழங்கியது.
அந்தவகையில் கடந்த ஒருமாதகாலமாக மலையகத்திலுள்ள மாவட்டங்களின் நிலவரத்தை ஆராய்ந்தோம். தமிழ் வாக்குகளை சிதறடித்து, தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்காக பல குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதை அறிந்தோம்.
எனவே, மலையக மக்களின் வாக்குகளை சிதறடித்து, இருக்கின்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்யக்கூடாது என்ற முடிவை மலையக பிராந்தியக்குழு எடுத்தது. இதன்படி தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தாமல் இருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளாக நேர்மையாக செற்படும் ஈரோஸ் அமைப்புக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பு உள்ளது. எனவே, இதனை மூலதனமாகப் பயன்படுத்தி ஈரோஸ் என்ற போர்வையில் களமிறங்க சிலர் திட்டமிட்டுள்ளனர் என எமக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தகையவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். அவர்களுக்கும் ஈரோஸின் மலையகப் பிராந்தியத்துக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போட்டியிடுவது தொடர்பில் அந்தந்த பிராந்தியங்களின் சூழ்நிலைகளுக்கேற்ப அங்குள்ள எமது குழுக்கள் முடிவெடுக்கும். " - என்றார்.

0 Comments