பாராளுமன்றம் நாளை (16ஆம் திகதி) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு கூடும் என்றும், கூட்டத்தில் அனைத்து எம்பிக்களுக்கும் கலந்து கொள்ளுமாறும் சபாநாயகர் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.
1981 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகள் மற்றும் அரசியலமைப்பின் 40வது பிரிவின் பிரகாரம் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவாா் என சபாநாயகர் தெரிவித்தார்.
அனைத்துக் கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் இந்த ஜனநாயக செயல்முறைக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறும் சபாநாயகா் கேட்டுக்கொண்டாா்.
மேலும், முறையான ஜனநாயக நாடாளுமன்ற முறையை நடைமுறைப்படுத்துவதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் சுதந்திரமாக மனசாட்சிப்படி செயற்படுவதற்கும் கூட்டங்களில் பங்குபற்றுவதற்கும் பொருத்தமான அமைதியான சூழலை உருவாக்குமாறும் சபாநாயகர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இவ்வாறானதொரு அமைதியான சூழ்நிலையில் பொறுப்புவாய்ந்த அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் ஏழு நாட்களுக்குள் இந்த செயற்பாடுகளை நிறைவுசெய்ய இருப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

0 Comments