வீட்டுப் பணிப்பெண்களை ஓமான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பாலியல் அடிமைகளாக கடத்தியது தொடர்பான விசாரணைகளை முடக்குவதற்கு, மனித கடத்தல் காரா்களின் கும்பலினால் பொலிசாருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்த விசாரணையின் பிரகாரம், பிரதான வேலைவாய்ப்பு முகவர்கள், தரகர்கள் மற்றும் தூதரகங்களுடன் தொடர்புடைய பல அதிகாரிகளின் தொடா்புகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
இதன் பிறகே விசாரணைகளை தடுத்து நிறுத்த பொலிஸாா் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக அறிய வந்திருக்கிறது.
இந்த மனித கடத்தல் செயல்களில் ஈடுபட்டுள்ள கடத்தல்காரர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளுடனான தமது உறவுகளைப் பயன்படுத்தி விசாரணைகளை முடக்க அழுத்தத்தை பிரயோகித்து வருவதாகத் தெரியவந்துள்ளது.
ஆட்கடத்தலில் ஈடுபடும் வேலைவாய்ப்பு முகவர்களை சிக்க வைப்பதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்த போதிலும், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விடாமல் பல்வேறு அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.
இந்த மனித கடத்தலைத் தேடுவதற்காக ஓமன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட குழுக்களை அனுப்புமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டிருந்தார்.
ஐக்கிய நாடுகளின் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (International Organization for Migration -IOM) ஓமான் சென்ற புலனாய்வு அதிகாரிகளுக்கான செலவை பொறுப்பேற்றிருந்தது. இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள வேறு நாடுகளுக்கும் அதிகாரிகளை அனுப்ப இந்த அமைப்பின் ஆதரவை கோருவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த மனித கடத்தல் விசாரணைகளை அழுத்தம் கொடுத்து முடக்குவதற்கு குறித்த சக்திகள் முயற்சிப்பதாகவும், ஓமான் கடத்தலில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபா் ஒருவருக்கு பிணை வழங்குவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும், குறித்த நபருக்கு பிணை வழங்கப்பட்டது ஒரு பேசுபொருளாகியிருப்பதாக உயா் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி சிங்கள இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
0 Comments