கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் அடுத்த வார இறுதியில் முன்னெடுக்கப்படவுள்ள டெங்கு ஒழிப்பு விசேட சுத்திகரிப்பு வேலைத்திட்டத்திற்கு வீடுகளிலேயே தங்கி ஆதரவளிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின்படி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு வார காலத்திற்கு பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என டெங்கு கட்டுப்பாட்டு நிபுணர் குழுவின் தலைவரான சுகாதார இராஜாங்க அமைச்சர் டொக்டர் சீதாஅரம்பேபொல தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அமைச்சர்கள் குழு மற்றும் நிபுணர் குழு இரண்டையும் நிறுவி நாட்டில் கொவிட் 19 மற்றும் டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் வகையில் தீர்க்கமான நடவடிக்கை எடுத்தார். நிபுணர் குழுவின் பணியை எளிதாக்க, ஒன்பது மாகாண துணைக்குழுக்கள் நிறுவப்பட்டுள்ளன. கோவிட்-19 மற்றும் டெங்குவுக்கு எதிரான போராட்டத்தில் மாகாண மட்டத்தில் ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் மேம்படுத்துவதே இந்த துணைக் குழுக்களின் ஈடுபாட்டின் நோக்கமாகும்.
இராஜாங்க அமைச்சர் டொக்டர் சீதா அறம்பேபொலவின் கூற்றுப்படி, டெங்கு நுளம்புகள் அதிகம் உற்பத்தியாகும் இடங்களாக பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக வளாகங்கள் மற்றும் கைவிடப்பட்ட காணிகளை ஆய்வு செய்வதற்கு குறிப்பிட்ட நாட்களை நிர்ணயித்து இந்த வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படும். . இதற்கிடையில், பிற மாகாணங்கள் தங்கள் சொந்த சவால்களை அடையாளம் கண்டு குறிப்பிட்ட திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தப்படுகின்றன.
ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 47,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர்களில் 50% மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். காலநிலை மாற்றத்துடன் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாகவும், இந்த நிலைமையை கட்டுப்படுத்தாவிடின், டெங்கு நோயானது கொவிட் போன்ற உயிரிழப்பை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் டொக்டர் சீதா அரம்பேபொல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

0 Comments