90 லட்சம் போர்
வீரர்கள், 1 கோடிக்கும் மேற்பட்ட பொதுமக்களின் உயிரைக் குடித்த முதல்
உலகப் போர், உலக நாடுகளின் வரலாற்றையும் வரைபடத்தையும் மாற்றியமைத்தது.
1914-ல் தொடங்கிய இந்தப் போர், சரியாக 4 ஆண்டுகள் 4
மாதங்கள் நடைபெற்றது. ஆஸ்திரியா – ஹங்கேரி, ஜெர்மனி, பவேரியா, ஓட்டாமான்
பேரரசு உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா
உள்ளிட்ட நாடுகள் போரில் ஈடுபட்டன. ஏப்ரல் 1917-ல் பிரிட்டனுக்கு ஆதரவாகப்
பலம் வாய்ந்த அமெரிக்கா களமிறங்கியது. எனினும், 1918 தொடக்கம் வரை நேச
நாடுகளின் படைகளுக்கு ஜெர்மனி சிம்ம சொப்பனமாகத்தான் இருந்தது. மார்ச்
1918-ல் பிரான்ஸின் மேற்குப் பகுதியில் நடந்த உக்கிரமான சண்டையில்
பிரிட்டன் படைகளைச் சிதறடித்தது ஜெர்மனி. எனினும் அதன் பலம் நீடிக்கவில்லை.
பிரிட்டன் – பிரான்ஸ் படைகள் திருப்பித் தாக்கத் தொடங்கின.
அதன் பின்னர் ஜெர்மனிக்குப் பின்னடைவுதான். ‘வெற்றி நம் பக்கம் இல்லை’
என்று ஜெர்மனியின் கூட்டணி நாடுகள் முடிவுக்குவந்தன. “இனிமேல் அமைதி
காப்போம்; போரில் ஈடுபட மாட்டோம்” என்று தற்காலிகப் போர் நிறுத்த
ஒப்பந்தத்தில் ஜெர்மனி கையெழுத்திட்டது.
11.11.1918-ல் காலை 11 மணிக்கு முதல் உலகப் போர்
முடிவடைந்தது. அன்று காலை போர்க்களத்தில் இருந்த தளபதிகள் தங்கள்
கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சரியாக 11 மணிக்கு ‘போர்
முடிந்தது’ என்று அறிவித்தபோது வீரர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக்
குதித்தனர். அதேசமயம், போர் நிற்கப்போகும் சமயத்திலும் சில தளபதிகள்
தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். இதனால் கடைசி நேரத்தில்
தேவையில்லாமல் பல வீரர்கள் உயிரிழந்தார்கள்.
1919 ஜூன் 28-ல் கையெழுத்தான வெர்சைல்ஸ் ஒப்பந்தம்
ஜெர்மனிக்குப் பெரும் நெருக்கடியைத் தந்தது. முதல் உலகப் போரில் பவேரிய
ராணுவத்தில் சிப்பாயாக இருந்த ஹிட்லர், ஜெர்மனியின் சர்வாதிகாரியாக
உயர்ந்து, இரண்டாம் உலகப் போருக்கு முக்கியக் காரணமாக அமைந்தது தனி வரலாறு.

0 Comments