எதிரணி பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள முஸ்லிம் கட்சிகளின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களின் பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அக்கட்சிகள் அதிருப்தியடைந்துள்ளன.
மத்தியிலும் மாகாணத்திலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாக இருந்த இரண்டு கட்சிகளும் ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணிகளின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குகின்றன.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு கட்சி பேதமின்றி பொலிஸார் இருவர் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளனர்.
மாகாண அமைச்சர்களுக்கும் கட்சிகளின் குழுத் தலைவர்களுக்கும் மேலதிகமாக 3 தொடக்கம் 5 பொலிசார் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டனர்.
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேர் உள்ளனர்.
நான்கு உறுப்பினர்களின் பொலிஸ் பாதுகாப்பு நீக்கம் தொட்பான உத்தரவு இன்று மாலை உரிய தரப்பினர்களுக்கு கிடைத்துள்ளதாக தெரியவருகின்றது.
இன்று காலை கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையத்திலிருந்து வந்த உத்தரவின் பேரில் தனது பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸார் 7 பேரும் பொலிஸ் நிலையத்திற்கு திரும்பி விட்டதாக முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ. எம. ஜமீல் கூறுகின்றார்.
இந்த நடவடிக்கையானது அரசாங்கத்தின் பழிவாங்கும் செயல் என்றும் அவர் கூறுகின்றார்.
இதனிடையே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவரது பாதுகாப்பு கடமையிலிருந்தும் பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு திரும்பி விட்டதாக அக்கட்சியின் உறுப்பினர் மொஹமட் பாறுக் சிப்லி கூறுகின்றார்.
இது தொடர்பாக உள்ளுர் பொலிஸ் அதிகாரிகளிடம் வினாவிய போது, மேலிடத்து உத்தரவு என பதில் தரப்பட்டதாக அவர் கூறினார்.
தங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கின்ற சூழ்நிலையில் ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை அரச தரப்பே ஏற்க வேண்டும் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
இது தொடர்பாக பொலிஸ் தரப்பின் பதிலைப்பெற முயன்ற போதிலும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் தொடர்பு கிடக்கவில்லை.

0 Comments