நேபாளத்தை பூகம்பம் தாக்கி கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் ஆகும் நிலையில், தலைநகர் காத்மாண்டுவில் ஒரு இடிபாட்டுக் குவியலில் இருந்து ஒரு 15 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
டன் கணக்கான கற்குவியலுக்கு அடியில் ஒரு சின்ன இடைவெளியில் சிக்கியிருந்ததால் இவர் உயிர் பிழைத்திருந்தார்.
வெளிச்சம் கண்ணைக் கூசியதால் கண் மூடியபடி அவர் வெளியே கொண்டுவரப்பட்டபோது, சுற்றியும் நிறைய பேர் கூடி நின்று குரலெழுப்பி அவரை வரவேற்றனர்.
பின்னர் அவர் உடனடியாக மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
நேபாளம் எங்கிலுமாக 5500 பேருக்கும் அதிகமானோர் இந்த பூகம்பத்தில் உயிரிழந்துள்ளதாகத் தற்போது தெரியவந்துள்ளதென அதிகாரிகள் கூறுகின்றனர்.
பூகம்ப மையம் அமைந்திருந்த பல கிராமங்கள் உணவு, குடிநீர், உறைவிடம் இன்றித் திண்டாடுகின்றன.
ஐந்து நாட்கள் மலைப்பாதையில் நடந்தால்தான் சென்றடைய முடியும் என்ற தூரத்தில் சில கிராமங்கள் இருப்பதாக ஐநா கூறுகிறது.
நேபாளத்துக்கு உதவ அடுத்த மூன்று மாத காலத்தில் 41.5 கோடி டாலர்கள் தேவை என்று கோரி சர்வதேச சமூகம் அத்தொகையை முன்வர வேண்டும் என்றும் ஐநா கேட்டுக்கொண்டுள்ளது.
காத்மாண்டுவில் உள்ள ஒரே சர்வதேச விமான நிலையத்தில் நிவாரணப் பொருட்களை சுமந்து வரும் பல விமானங்கள் தரையிறங்குவதாலும் திரும்பிச் செல்வதாலும், அதன் ஒரே ஓடுபாதையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

0 Comments