பத்திரிகை உலகின் மகத்தான ஓவியர்களுள் ஒருவர் கோபுலு. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். 91 வயதான கோபுலு இன்று மாலை சென்னையில் காலமானார்.
தஞ்சையில் 1924-ம் ஆண்டு பிறந்த இவரது இயற்பெயர் கோபாலன். விகடனில் அந்த நாளில் புகழ்பெற்ற ஓவியராகத் திகழ்ந்த மாலி, கோபாலன் என்கிற இவரது இயற்பெயரை கோபுலு என மாற்றினார்.
1945 முதல் ஆனந்த விகடனில் முழுநேர ஓவியராகப் பணிபுரிந்த கோபுலு, அமரர் தேவனின் கதைகள், கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் உள்ளிட்ட புகழ்பெற்ற படைப்புகளுக்குத் தன் தூரிகையால் உயிர் கொடுத்தவர்.
ஆனந்த விகடனில் 1951 முதல் 1968 வரை தொடர்ந்து 18 ஆண்டுகள் இவர் வரைந்த காமிக் ஸ்ட்ரிப்புகள் (வார்த்தைகள் இல்லாமல் மவுன நகைச்சுவை ஓவியங்கள்) வாசகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்றவை. தமிழகத்தின் முக்கியமான சில நிறுவனங்களின் ‘லோகோ’க்களை இவர் தன்னுடைய ‘ஆட் வேவ்’ என்கிற விளம்பர நிறுவனம் மூலம் உருவாக்கி உள்ளார்.
‘மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய சிறுகதைகளுக்கு வரைந்த ஓவியங்கள்தான் எனக்குப் பிடித்தமானவை’ என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். தன்னுடைய வாழ்நாளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்தவர் கோபுலு என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments