வடக்கில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுவரும் ‘ஆவா’ குழுவின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவும் அவரது குழுவினரும் இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
வடக்கில் பத்தற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தும் நோக்கம் இவர்களுக்கே இருப்பதாகவும், ஆவா குழுவினை ஒடுக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று புதன்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அங்கு கருத்து வெளியிடும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “யுத்த காலத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் ஆலோசனைப்படி முக்கிய இராணுவ உயரதிகாரியினால் ‘ஆவா’ குழு ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டது. இதற்குத் தேவையான பணம், ஆயுதம், மோட்டார் சைக்கிள் என்பனவும் அக்குழுவினருக்கு வழங்கப்பட்டன. அன்று புலிகளுக்கு எதிராக செயற்பட இவ்வாறான குழு தேவைப்பட்டிருக்கலாம். இன்று அதற்கான தேவை என்ன? இன்றும் அதே ஆயுதக்குழு வடக்கில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்று வருகிறது. ஆட்சியை கவிழ்க்கவும் நாட்டை குழப்பவும் முயற்சி இடம்பெறுகிறது.
இன்று ‘ஆவா’ குழு வடக்கில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இன்றும் அதே ஒருசிலரே ‘ஆவா’ குழுவை வழிநடத்தி வருகின்றனர். இது தொடர்பில் தகவல் திரட்டி உரிய நடவடிக்கை எடுக்குமாறு புலனாய்வு பிரிவை கோருகிறோம். இது தொடர்பான தகவல்களைத் திரட்டி இதனைக் கட்டுப்படுத்த சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இதன் பின்னணியில் இருப்பவர்கள் ஓய்வு பெற்ற அதிகாரிகள் என்பதால் இந்தக் குழுவை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்காது.
இந்த குழுவுடன் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தொடர்பு இருப்பதை சட்டபூர்வமாக நிரூபிக்க முடியும் என்றால் அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க முடியும். வடக்கில் அமைதியின்மையை ஏற்படுத்தும் தேவை இன்று யாருக்குள்ளது.
தமிழ் மக்கள் தங்களுக்கு கிடைக்கும் நிவாரணங்கள் தாமதமாகும் போது எழுச்சி கொள்கின்றனர். தெற்கிலும் அந்த நிலை உள்ளது. ‘ஆவா’ போன்ற ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளினால் வடக்கு பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்தக் குழுவுக்கும், டயஸ்போராக்களுக்கும் தொடர்பு கிடையாது.” என்றுள்ளார்.

0 Comments