Ticker

6/recent/ticker-posts

சென்னையில் டிசம்பர் 2-ம் தேதி புத்தக மாற்றுத் திருவிழா







இந்து தமிழ் நாளிதழிலிருந்து...
சென்னையில் மிகப்பெரிய அளவில் புத்தக மாற்றுத் திருவிழா (Book Exchange Event) வரும் டிசம்பர் 2-ம் தேதி தி.நகர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் உள்ள இன்ஃபோசிஸ் ஹாலில் நடைபெற உள்ளது.
பெரும்பாலானோர் புத்தகங்கள் படிப்பதே அரிதாகிப் போன  இந்த நாட்களில் தான் அதிக புத்தகங்களும்  பிரசுரிக்கப்படுகின்றன. அதுவும் சுய பிரசுரிப்பாளர்கள் இப்போது அதிகம் உருவாகத் தொடங்கிவிட்டனர். முன்பெல்லாம் ஒரு எழுத்தாளர் பதிப்பாளர்களை நோக்கி ஓடவேண்டும். அவர்கள் தம் புத்தகத்தை பிரசுரிப்பாளர்களா? அப்படியே பிரசுரித்தாலும் பணம் கொடுப்பாளர்களா என்ற பல போராட்டங்கள் இருந்தன. ஆனால் இன்றைய இணைய  உலகில் வளர்ந்து வரும் ஒரு புது எழுத்தாளர் எந்த பதிப்பாளரையும் சார்ந்து இருக்கத் தேவையில்லை. எழுதியவரே  சுயமாக அவர்களின் புத்தகத்தை இயற்றி வெளியிடலாம். அதற்கு இணையம் ஒரு மிகப்பெரிய புரட்சியைச் செய்துள்ளது. அமேசான் போன்ற இணையதளங்களில் நம் புத்தகங்களை நாம் வெளியிட்டால் நமக்கு ஒரு நல்ல விளம்பரம் கிடைப்பது மட்டுமில்லாமல் விற்ற உடன்  பணமும் கிடைத்துவிடுகிறது.
ஒரு பக்கம் இப்படி எழுத்தாளர்கள் பெருகி வர மறுபக்கம் அதன் வாசகர்களும் பெருகி வருகிறார்கள். ஒரு செயலியைத்  தரவிறக்கி அதன் மூலம்  படிப்பது சுலபமாக இருப்பதனால் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம்  படிக்கும் நிலை உருவாகியுள்ளது. அது பத்து  பக்கமோ அல்லது ஐநூறு பக்கமோ எப்படியிருந்தாலும் சுமக்கப் போவதில்லை. அதனால் எந்நேரமும் நம் கையில் பல புத்தகங்கள் உள்ளன. அதுவே அதிக வாசகர்களை உருவாக்குகிறது .
இப்போது புத்தகங்களும் உள்ளன. வாசகர்களும் இருக்கிறார்கள். இவர்களை எப்படி இணைப்பது? ரசனை சார்ந்த கூட்டத்தை எப்படி சேர்ப்பது? எங்கே விவாதிப்பது, யாரிடம் கருத்தை கேட்பது. நாம் ரசித்ததை யாரிடம் பகிர்வது , பிடிக்காத விருப்பு வெறுப்புகளை எங்கே பதிவு செய்வது ? அதற்கான தளம்   தான் இந்த 'சைட் எ புக்'.  [siteabook ]
'சைட் எ புக்' செயலி யாருக்கு எதற்கு என்று அறிய IIM பெங்களுருவில் படித்துவிட்டு பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்களில் மிக உயரிய பதவிகளில் சுமார் 25 ஆண்டு  காலம் வேலைசெய்துவிட்டு இதனை உருவாக்கியிருக்கும்   அதன் உரிமையாளர் மணிகண்டன் கிருஷ்ணனைத் தொடர்பு கொண்டோம். 
அழகிய தமிழில் அவருடன் பேச பேச நமக்கும் புத்தகத்தின் மீதும் வாசிப்பின் மீதும் ஈர்ப்பு கூடுகிறது. இதோ அவருடன் நடந்த உரையாடல்...
இப்படி ஒரு செயலியை  உருவாக்க வேண்டும் என்று எப்படித் தோன்றியது?
எல்லோரையும் போன்று நானும் ஒரு சராசரி வாசகன் தான். ஒரு நாள் ஒரு புத்தகத்தை வாங்க அதனைப் பற்றி தெரிந்துகொள்ள யாராவது விமர்சனம் எழுதியிருக்கிறார்களா என்று இணையத்தில் தேடினேன். அந்தப் புத்தகங்களை விற்கும் பக்கங்களைத் தவிர வேறு எங்கும் அந்தப் புத்தகத்தின்  விமர்சனங்கள் கிடைக்கவில்லை. தனி மனித வாசகர்களின் ரசனையை ,விமர்சனங்களை, கருத்துக்களைப் பதிவு செய்தால் என்னைப் போன்றோர் அதிகம் புத்தகங்களை வாங்கிப் படிப்பார்கள் என்று நினைத்தேன். மார்ச்மாதம்  2017-ம் ஆண்டு 'சைட் எ புக்' [siteabook] தோன்றியது. முதலில் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆரம்பித்தோம். இன்று மொத்தம் 8 மொழிகளில் இரண்டரை லட்சத்திற்கும் மேல் உறுப்பினர்களுடன் மிகப்பெரிய வாசகர் வட்டம் உருவாகியுள்ளது.
உங்கள் விமர்சனப் பக்கங்களின் சிறப்பு என்ன ?
எளிமை என்பதே எங்களின் சிறப்பு. மிகச்சிறிய அளவில் நேர்த்தியான விமர்சனங்களை அந்தப் புத்தகங்களை படித்தோரிடமிருந்து  பெறுவதே எங்களின்  நோக்கம். வளர்ந்து வரும் இணைய  சூழலில் பலரின் கருத்தைக் கேட்டே நாம் எந்த முடிவையும்  எடுக்கிறோம். இன்று கூகுளில் தேடாமல் அதன் விமர்சனம் பாராமல் யாரும் எந்தப் பொருளையும் வாங்குவதில்லை .புத்தகமும் அதற்கு விதிவிலக்கல்ல.
எட்டு மொழிகளில் எந்த மொழிப் புத்தகத்துக்கு மிகவும்  அதிகம் வரவேற்பு இருக்கிறது?
தமிழ் தான். ஆங்கிலம் தவிர்த்து தமிழுக்கு தான் அதிக வரவேற்பு. அதே சமயம் பெங்காலி மற்றும் மராத்திக்கும் அதிக வரவேற்பு இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த இரண்டு மொழிகளிலும் தொடங்கிய பின்  எங்களின் சந்தாதாரர்கள் இருமடங்காக உயர்ந்துள்ளார்கள். குறிப்பாக வட அமெரிக்காவிலும், இலங்கையிலும் வாசகர்கள் அதிகம்.
உங்களின் அடுத்தகட்ட திட்டங்கள் என்ன?
ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்று புதிது புதிதாக சேர்ந்து கொண்டே போகிறது. மாஸ்டர்ஸ் ரிவ்யூவர்ஸ் [Masters Reviewers] என்று புதிதாகத் தொடங்கியுள்ளோம். அதி தீவிர  வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள் இதில் உறுப்பினர்கள்.  அவர்கள் புத்தகங்களைப் பற்றி மிகத் தீவிரமாக ஆராய்வார்கள். அதே போல் எங்கள் செயலி மூலம் புத்தகங்களை வாங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மிக விரைவில் எங்கள்  மூலம் புத்தகங்களை இணையத்தில் பிரசுரிக்கவும் செய்யலாம் .
கூடிய விரைவில் உலகத்தில் உள்ள அணைத்து வாசகர்களையும் இணைக்கும் ஒரு மிகப்பெரிய இடமாக இந்த  செயலி இருக்கும் என்பதில் ஐயமில்லை . வாசிப்பில் ஆர்வம்  உள்ளவர்களின் கைபேசியில் இந்தச் செயலி கட்டாயமாக இருக்கும். அதே போல் இந்த செயலி இருந்தால் வாசிப்பில் ஆர்வம் தன்னால் வரும்.
'சைட் எ புக்' செயலியின் சார்பாக சென்னையில் மிகப்பெரிய அளவில் புத்தக மாற்று (Book Exchange) நிகழ்வு வரும் டிசம்பர் 2-ம் தேதி ,தி.நகர் ,கிருஷ்ணா தெரு, ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் உள்ள இன்ஃபோசிஸ் ஹாலில் நடைபெறுகிறது. அனைத்து வாசகர்களும் தங்கள் படித்த புத்தகங்களை கொண்டுவந்து வேறு புத்தகங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம்.
இவ்வாறு மணிகண்டன் கிருஷ்ணன் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments