பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் குரல் பதிவின் பகுப்பாய்வு அறிக்கையை ஒரு மாதத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் மா அதிபரிடம் பெற்றுக்கொண்ட குரல் மாதிரியை ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
நேற்று (14) காலை 10 மணியளவில் பொலிஸ் மா அதிபர் அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு சென்றதுடன், சுமார் ஒரு மணித்தியாலம் அவரிம் குரல் பதிவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் இவ்வாறு பகுப்பாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகின்றமை இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரமுகர் கொலை சதித்திட்டம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக குரல் பதிவைப் பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டதற்கமையவே பொலிஸ் மா அதிபர் அழைக்கப்பட்டிருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஊழலுக்கு எதிரான படையணியின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் ஆகியோருடைய தொலைபேசி கலந்துரையாடலில் பொலிஸ் மா அதிபரின் குரல் இருக்கின்றதா என்பது தொடர்பில ஆராய்வதற்காகவே பொலிஸ் மா அதிபரின் குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா மற்றும் ஊழலுக்கு எதிரான படையணியின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார ஆகியோரின் குரல் மாதிரிகள் இதற்கு முன் பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments