காஷ்மீர் சர்வதேச எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இந்திய எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த துணை தளபதி இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதுகுறித்து எல்லை பாதுகாப்புப் படையின் உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், "காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில் இன்று காலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் பிஎஸ்எப்பின் துணை தளபதி துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார். உடனே அவர் உதம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், எனினும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்" என்றார்.
முன்னதாக, இன்று காலை ராஜாவ்ரி மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர்பானியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியின் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
பாகிஸ்தானிய துருப்புகள், சர்வதேச எல்லைப் பகுதியில் ஹிராநகர் செக்டரில் 2003-ம் ஆண்டின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக எல்லை பாதுகாப்புப் படை பிஎஸ்எப் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு அமைச்சகம் கருத்து
பாகிஸ்தான் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட துணை தளபதியின் பெயர் வினய் பிரசாத் என செய்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சகம் செய்தித் தொடர்பாளர் லெப்.கலோனில் தேவேந்தர் ஆனந்த், ஐஏஎன்எஸ்ஸிடம் தெரிவிக்கையில், ''பாகிஸ்தான் துருப்புகள் சிறிய ரக ஆயுதங்களையும் பீரங்கிகளையும் பயன்படுத்தி சுந்தர்பானி செக்டரில் இன்று காலை தாக்குதலை நடத்தியது.
நமது ராணுவத்தினரும் அதற்கு வலுவாகவும் திறம்படவும் பதிலடி கொடுத்தனர். காலை 10 மணிக்கு இரு தரப்பிலும் மாறி மாறி துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் உயிரிழப்பு அல்லது சேதாரம் எதுவும் இல்லை'' என்று அவர் தெரிவித்தார். tamil.thehindu.com

0 Comments