Ticker

6/recent/ticker-posts

பஷீர் சேகுதாவூத் வித்தியாலயத்தின் அலுவலக கணினி அறைக்கு தீ வைப்பு

மட்டக்களப்பு ஏறாவூர் கோட்டப் பிரிவிலுள்ள மீராகேணி பஷீர் சேகுதாவூத் வித்தியாலயத்தின் அலுவலக கணினி அறைக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ள இச்சம்பவம் குறித்து அப்பாடசாலையின் அதிபர் ஏ.எல்.பாறூக் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.
நேற்று மாலை வகுப்புகள் நடத்தப்பட்டு பூட்டப்பட்ட பாடசாலையை, ஆசிரியர் ஒருவர் இன்று காலை 8.50 மணியளவில் சென்று பார்த்தபோது அங்கு அலுவலக அறையிலிருந்து புகை வெளிவருவதைக்கண்டு அதிபருக்கு அறிவித்துள்ளார்.
அதன் பின்னர் குறித்த அறையைத் திறந்து பார்த்தபோது அங்குள்ள உபகரணங்களும் தளபாடங்களும் எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளன.
பாடசாலை அலுவலக அறையின் பின்பக்கமாகப் பொருத்தப்பட்டிருந்த சாளரத்தின் வழியாக மண்ணெண்ணையை ஊற்றி தீ வைக்கப்பட்டிருப்பதாகவும் இதனால், கணினி, அச்சிடும் கருவி, மாணவர் வரவுப் பதிவேடு இடாப்புக்கள், பதிவுக் கொப்பிகள், இருக்கைகள் தளபாடங்கள், உபகரணங்கள் உட்பட ஆவணங்களும் எரிக்கப்பட்டுள்ளதாகவும் பாடசாலை அதிபர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments