சென்னை கே.கே.நகரில் காதல் திருமணம் செய்த 3 மாதங்களில் தம்பதிக்குள் ஏற்பட்ட தகராறில் காதல் மனைவியை குத்திக் கொலை செய்தார் கணவன். சென்னையில் நான்காவது நாளாக தினம் ஒரு கொலை என தொடர்ந்து பதிவாகி வருகிறது.
கே.கே.நகரை அடுத்த நெசப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (47). இவரது மனைவி சரிதா(43). இவர்களுக்கு சந்தியா(20) என்கிற மகள் இருந்தார். இவரும் அருள் குமார் (24) என்பவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவருக்கும் திருமணம் நடந்தது. அருள் குமார் எலக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வருகிறார்.
திருமணத்திற்குப் பின் அருள் குமார் தனது மாமனார் வீட்டில் ஒன்றாக மனைவி சந்தியாவுடன் வசித்து வந்தார். சந்தியா மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார் அருள் குமார். இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சிறு சிறு சண்டைகள் வாக்குவாதங்கள் காரணமாக ஒத்துப்போகவில்லை. இருவரும் புரிந்து கொள்ளாமல் சண்டையிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் இருவரும் வழக்கம்போல் சண்டையிட்டுக்கொண்டனர். அப்போது மாமியார் சரிதா அவர்களைச் சமாதானப்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் நிதானமிழந்த அருள் குமார் கத்தியால் சந்தியாவைக் குத்தப் பாய்ந்தார். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த மாமியார் சந்தியா மருமகனைத் தடுக்கப் பார்க்க அவருக்குக் காயம் ஏற்பட்டது.
அந்த சூழலிலும் ஆத்திரம் அடங்காத அருள் குமார் சந்தியாவைக் கத்தியால் குத்த, தொண்டையில் குத்துப்பட்டதால் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். பலமான குத்து என்பதால் அதிக அளவில் ரத்தம் வெளியேறி சிறிது நேரத்தில் சந்தியா உயிரிழந்தார்.
உடனடியாக அருகில் உள்ளவர்கள் அருள் குமாரைப் பிடித்து வைத்து கே.கே.நகர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த உதவி கமிஷனர் வின்சென்ட் ஜெயராஜ், இன்ஸ்பெக்டர் பிராங்க் ரூபன் ஆகியோர் அருள் குமாரைக் கைது செய்தனர்.
சந்தியாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து அருள் குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலித்து திருமணம் செய்து மூன்று மாதங்கள் முடிவதற்குள் மணவாழ்க்கை கசந்து கணவன் மனைவியைக் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த 4 நாட்களாக தினம் ஒரு கொலை என 4 கொலைகள் நடந்துள்ளன. முதல் நாள் அரும்பாக்கத்தில் ரவுடி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மறுநாள் கொரட்டூரில் தேமுதிக பிரமுகர் ஓட ஒட்ட வெட்டிக் கொல்லப்பட்டார். நேற்று நீலாங்கரையில் காருக்குள் ஒருவரைக் கொலை செய்து அவரது உடலை வீசிவிட்டுச் சென்ற நிலையில் இன்று 4-வது கொலை நடந்துள்ளது.
0 Comments