Ticker

6/recent/ticker-posts

நாவலப்பிட்டியவில் வாழும் தமிழ் மக்களுக்கு தலைநிமிர்ந்து வாழ்வதற்கான யுகத்தை நானே ஏற்படுத்திக்கொடுத்தேன் - வேலுகுமார்


அதிகார வர்க்கத்தாலும், இனவாத கும்பலாலும் கடந்த காலங்களில் அடக்கி ஆளக்கப்பட்ட, ஒடுக்கி ஓரங்கப்பட்ட நாவலப்பிட்டியவில் வாழும் தமிழ் மக்களுக்கு தலைநிமிர்ந்து வாழ்வதற்கான யுகத்தை நானே ஏற்படுத்திக்கொடுத்தேன். இதனால் அவர்களுக்கான அரசியல் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளது - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.


நாவலப்பிட்டிய தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

" எமது மலையக மக்களுக்கு 1948 முதல் 88 வரையில் வாக்குரிமை இருக்கவில்லை.  40 ஆண்டுகளுக்கு பின்னரே அந்த உரிமை கிடைத்தது. 
இவ்விடத்தில் வாக்குரிமை தொடர்பில் ஏன் கதைக்கின்றேன் என்றால் அதன் பின்னால் கடந்த காலங்களில் அரங்கேறிய அடக்குமுறை கதையொன்று இருந்தது. 

அதாவது மலையக மக்களுக்கு வாக்குரிமை கிடைத்திருந்தாலும், அதனை சுதந்திரமாகவும், மனசாட்சியின் பிரகாரமும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு 2015 இற்கு முன்னர் நாவலப்பிட்டிய பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்கு இருக்கவில்லை. வாக்களிப்பு இயந்திரமாகவே அவர்கள் கருதப்பட்டனர்.

குறிப்பிட்ட ஒருவருக்கு மட்டும்தான் வாக்களிக்கவேண்டும் என மிரட்டப்பட்டனர். மறுத்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. தோட்டங்களுக்கு குண்டர்குழுசென்று தாக்குதல் அராஜக அரசியலும் அரங்கேறியது.   அதுமட்டுமல்ல அபிவிருத்தியின்போது தோட்டப்பகுதிகள் புறக்கணிக்கப்பட்டன. ஏதோ பாசாங்கு காட்டுவதற்காக கிள்ளி கொடுக்கும் வகையில் ஆங்காங்கே வீதிகள் போடப்பட்டன.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அதிகார வர்க்கத்தின் கோரப்பிடிக்குள் இருந்து தமக்கு சுதந்திரம் வேண்டும், உரிமை அரசியல் வேண்டும் என்பதற்காக 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போதும் பொதுத்தேர்தலின்போதும் நாவலப்பிட்டிய தொகுதியில் வாழும் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு வாக்களித்தனர். கண்டி மாவட்டத்துக்கு தமிழ்ப் பிரதிநிதித்துவம் என்ற கனவை நிறைவேற்றுவதற்கு பங்களிப்பு வழங்கினர்.

மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் நான் பாராளுமன்ற உறுப்பினரானேன். எதற்காக நாவலப்பிட்டிய தொகுதியில் வாழும் தமிழ் மக்கள் எனக்கு வாக்களித்தார்களோ, எதனை எதிர்பார்த்தார்களோ அவற்றை நான் நிறைவேற்றியுள்ளேன் என்ற திருப்தி எனக்கு இருக்கின்றது. 

அப்பகுதியில் வாழும் மக்களுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கினேன். தலைநிமிர்ந்து வாழக்கூடிய யுகத்தை உருவாக்கினேன். கைகட்டி வாழ்வதற்கு பதிலாக அநீதியை தட்டிக்கேட்கும் தைரியத்தை வழங்கினேன். 

அதேபோல் நாவலப்பிட்டியவில் கதிரேசன், வெஸ்ட்வோல், கலமுதன உட்பட பல பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. புதிய கட்டடங்களும் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன.  கல்வித்துறைக்கான இப்படி பல சேவைகள் தொடர்ந்தன. நாவலப்பிட்டிய தொகுதியில் தனிவீட்டு திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. வெறும் நான்கரை வருடங்களில்தான் இவற்றை நான் செய்தேன். சிற்சில குறைபாடுகள் இருக்கலாம். அதனை அடிப்படையாகக்கொண்டு சிலர் மத்தியில் விமர்சனமும் இருக்கின்றது. அவற்றையும் நாம் நிவர்த்தி செய்வோம்.  எனது வெற்றி உறுதி. அதனை வரலாற்று வெற்றியாக மாற்றியமைக்க நாவலப்பிட்டியவில் வாழும் தமிழ் மக்களின் ஆதரவு அவசியம். அதனை வழங்குவீர்கள் என நம்புகின்றேன்." - என்றார்.

Post a Comment

0 Comments