ஆணவக்கொலை எதிர்ப்பாளரும், சாதி எதிர்ப்புப் போராளியுமான கவுசல்யா, கோவையைச் சேர்ந்த பறை இசைக் கலைஞர் சக்தியை மறுமணம் செய்தார்.இவர்களின் திருமணம் கோவையில் உள்ள தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று எளிமையாக நடந்து முடிந்தது.
இந்தத் திருமண நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, எவிடென்ஸ் கதிர், உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினார்கள்.
உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சங்கரை காதலித்து திருமணம் செய்யும் வரை கவுசல்யா என்ற பெண்ணை இந்த வெளி உலகிற்கு யாரென்று தெரியாது.
அனைத்துப் பெண்களையும் போல் தானும் அமைதியான குடும்ப வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் சங்கரைத் திருமணம் செய்த கவுசல்யாவுக்கு 9 மாதங்கள் குடும்பம் அமைதியாகத்தான் சென்றது. ஆனால், உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த தனது மகள், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை திருமணம் செய்தது பொறுக்கமுடியாத கவுசல்யாவின் குடும்பத்தினர், கொலை செய்ய முடிவு செய்தனர்.
2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி உடுமலைப்பேட்டை பகுதியில் பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் உள்ள சாலையில், கவுசல்யாவையும், சங்கரையும் கூலிப்படையினர் காட்டுமிராண்டித்தனமாக வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பினார்கள். இதில் சங்கர் கொல்லப்பட்டார், பலத்த வெட்டுக்காயத்துடன் மீட்கப்பட்ட கவுசல்யா உயிர் தப்பினார்.
இந்தக் கொலை தொடர்பாக கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். தனது கணவரை கொடூரமாகக் கொலை செய்த தனது பெற்றோருக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டி கவுசல்யா போராளியாக மாறினார். பல்வேறு தரப்பினரின் உதவியுடன் சட்டப்போராட்டம் நடத்தினார் கவுசல்யா. தனது கணவர் சங்கர் கொல்லப்பட்டபோது கவுசல்யாவுக்கு 19 வயது மட்டுமே நிறைவடைந்திருந்தது.
சங்கரைத் திருமணம் செய்து வாழும்வரை சாதாரண பெண்ணாக அறியப்பட்ட கவுசல்யா, சங்கருக்கு நேர்ந்த கதிக்குப்பின், சாதியின் கொடுமையை எதிர்த்துக் குரல் கொடுத்தும் போராளியாக சமூகத்தில் அறியப்பட்டார்.
ஏறக்குறைய, ஒன்றே முக்கால் ஆண்டுகள் கவுசல்யாவின் சட்டப் போராட்டத்துக்குப் பின் திருப்பூர் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
இதில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்பட 6 பேருக்கு தூக்குத்தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, அவரின் மாமா உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்தும், மீதியுள்ளவர்களுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் வழங்கியது.
ஆனால், இந்த வழக்கில் விடுவிக்கப்பட்ட தனது தாய், மாமா உள்ளிட்டோருக்கும் தண்டனை பெற்றுத்தர உயர் நீதிமன்றம் செல்வேன், ஆணவப்படுகொலையைத் தடுப்பேன் எதிர்ப்பேன் என்று கவுசல்யா சமூகத்தில் வலம் வருகிறார்.
தமிழக்தில் ஆணவக்கொலையை எதிர்த்து நடக்கும் கூட்டங்கள், சாதி ஒழிப்பு பிரச்சாரங்கள், போராட்டங்கள் உள்ளிட்டவற்றில் பங்கேற்று தனக்கு ஏற்பட்ட நிலையையும், ஆணவக் கொலையின் இரக்கமற்ற முகத்தையும் சமூகத்துக்கு வெளிக்காட்டி வந்தார்.
ஆணவக் கொலைக்கு எதிரான கவுசல்யாவின் முழக்கத்துக்கும், போராட்டத்துக்கும் சமூக ஊடகங்கள் வாயிலாக ஒரு சில சாதிப்பற்றாளர்கள் தொடர்ந்து வசைமாரி பொழிந்தாலும், சாதிமறுப்புக்கு எதிரான தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார் கவுசல்யா.
இந்நிலையில், கோவையைச் சேர்ந்த பறை இசைக்கலைஞர் சக்தியை நேற்று கவுசல்யா மறுமணம் செய்தார். கோவையைச் சேர்ந்த சக்தி, கம்ப்யூட்டர் பிரிவில் பட்டம் பெற்று, கோவை பாரதியார் பல்கலையில் பறை இசையில் பட்டயப்படிப்பு படிப்பு முடித்தவர்.
கடந்த 2011-ம் ஆண்டில் இருந்தே பறை இசை மீது தீவிர நாட்டம் கொண்டிருந்த சக்தி, பறை இசைப்படிப்பு முடித்த பின், நாட்டுப்புறக்கலையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
கோவையில் உள்ள தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இவர்கள் திருமணம் நேற்று எளிமையாக நடந்து முடிந்தது.tamil.thehindu.com
0 Comments